அலுவலகத்தில் எனக்கு நல்ல பெயர். “ராம் மாதிரி உழைப்பாளி கிடைப்பது கஷ்டம்” என்று சொல்லிச்சொல்லியே வேலையை தலையில் கட்டுவார்கள். பெண் ஊழியர்களிடம் வேலை தவிர பேச்சு வைத்துக்கொள்வதில்லை. மனைவிமேல் உள்ள காதலினால் அல்ல. என்மேல் இல்லாத நம்பிக்கையினால். திருமணம் ஆகும்வரை பல பெண்களை காதலித்திருக்கிறேன், அவர்களுக்கு தெரியாமல். திருமணத்திற்கு பின் வாலை சுருட்டி கொண்டு இருக்கிறேன்.
ஆனால் கௌசல்யா விஷயமே வேறு. என் டீமில்தான் இருந்தாள். சிரித்துக்கொண்டே இருப்பாள், சிரிக்கவைத்துக்கொண்டே இருப்பாள். அதனால்தான் அன்று சிவந்த கண்களோடு அவளை பார்த்ததும் என்னை அறியாமல் கேட்டு விட்டேன் “என்ன ஆச்சு? எனி ப்ராப்ளம்?”.
அவளும் கணவரோடு ஏதோ சண்டை என்று கூறி அழுதாள்.
வீட்டிற்க்கு செல்லும் வழியில் ஒரு மெசேஜ் அனுப்பினேன் “உங்களிடம் விசேஷமே சிரிப்புதான், அதை விடாதீர்கள்”
உடனே பதில் வந்தது “தேங்க்ஸ். உங்கள் மனைவி லக்கி இப்படி காது கொடுத்து கேட்கும் கணவன் வாய்த்ததுக்கு.”
ஏனோ ஜிவ்வென்று இருந்தது. தப்பு செய்கிறேனோ என்று ஒரு குரல் கேட்டது. அதை அடக்கிக்கொண்டு, “உங்கள் கணவரும்தான்” என்று பதில் எழுதினேன்.
வீட்டை அடைந்தும் அரட்டை தொடர்ந்தது. என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால் அடுத்த நாள் எப்போது விடியும் அவளை எப்போது பார்ப்போம் என்று காத்திருந்தது மட்டும் சத்தியம்.
மற்றவர் எதிரில் நடந்து கொள்ள இருவரும் பழகிக்கொண்டோம். வாட்ஸாப் கண்டுபிடித்தவனை வாழ்த்தாத நாள் இல்லை. இது ஒரு நல்ல நட்பு மட்டும்தான் என்று நான் எனக்கே நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தேன்.
“ஒரு நாள் லன்ச் போலாம்” என்று அவள்தான் சொன்னாள்.
“நானே நெனச்சேன். நீ எப்படி எடுத்துப்பியோனுதான்”
ஒரு முகூர்த்தநாளாக பார்த்து அலுவலகத்திலிருந்து தள்ளி இருக்கும் ஒரு உணவு விடுதிக்கு சென்றோம்.
அருகருகில் அமர்ந்துக்கொண்டோம். விரல்கள் கொஞ்சம் உரசிக்கொண்டது தற்ச்செயலாக மட்டுமே என்று சொல்ல முடியவில்லை. கல்லூரி வயது இளைஞர்கள் போல் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது எனக்கே வேடிக்கையாக இருந்தது.
தொலைபேசி அடித்தது. கட் செய்தேன். இன்னும் நான்கு முறை அப்படியே நடந்ததும் கௌஸல்யா கவனித்தாள். “யாரு ஃபோன்? ஆன்சர் பண்ணேன்’.
“என் வைஃப்தான்”
“என் ஹஸ்பண்டும் இப்படித்தான். கால் பண்ணா கட் பண்ணுவார்”.
அதற்க்கு பிறகு என்னவென்று தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு பேச விஷயங்கள் குறைந்துபோனது.