Sunday, July 30, 2017

மது

“நாளை மறுநாளுக்கு இந்தியா செல்ல எனக்கும் குழந்தைகளுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டேன்” என்று வாட்ஸாப்பில் செய்தி அனுப்பி ஐந்து வினாடிகளில் பதில் வந்தது. “வாட் நான்ஸென்ஸ். இப்பொழுதே கான்ஸல் பண்ணு. மாலை டிஸ்கஸ் பண்ணலாம்”.
“பேசி ப்ரயோஜனம் இல்லை. நாம் வாழ்வது நாடகம். நடித்து சலித்து விட்டது எனக்கும் உனக்கும். போதும். நீ உனக்கு ஏற்றார்ப்போல் ஒரு பெண் - நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, உன்னுடன் ஒயின் அருந்தி, வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்துக்கொண்டு வந்து, தினம் ஜிம்மிற்க்கு சென்று உடலை நீ சொல்லும் அளவுக்கு வைத்துக்கொண்டு, வீட்டு வேலைகளை சிரித்துக்கொண்டே செய்துக்கொண்டு, குழந்தைகளை படிக்க வைத்து, காலையில் செய்தித்தாள் படித்துவிட்டு, மாலை நீ அலுவலகத்தில் இருந்து வந்ததும் உனக்கு பிடித்த சமையலை குக்கர் சத்தம் வராமல், மணம் வெளியே தெரியாமல் செய்து, பரிமாறும்போது நாட்டு நடப்பை பற்றி உன் அபிப்பிராயங்களை கேட்டு, புரிந்த்து போல் தலையாட்டி, அவளை பற்றியும், அவள் குடும்பத்தைப்பற்றியும் நீ நகைச்சுவை என்ற பெயரால் சிறுமைப்படுத்துவதை பொறுத்துக்கொண்டு, என்ன சொன்னாலும் நீ அழைக்கும்போது உன்னுடன் படுக்கக்கூடிய ஒரு மாடர்ன் பெண்ணை திருமணம் செய்துக்கொள்.”
பதில் தாமதமாகத்தான் வந்தது – “உன்னை திருத்த முடியாது”.
குழந்தைகளிடம் மெதுவாக விஷயத்தை சொன்னேன்.
“மது, ஆதி, நாம சென்னைக்கு போறொம், பாட்டி தாத்தா வீட்டுக்கு”.
ஐந்து வயது ஆதிக்கு குஷி. “அங்க தினம் லட்டு சாப்பிடலாம். நான் பீம் மாதிரி ஸ்ட்ராங்க் ஆயிடுவேன்.”
மதுவிற்க்கு எட்டு வயது. தானுண்டு தன் புத்தகம் உண்டென்று இருக்கும். அப்பாவுடன் சண்டை போடாவிட்டாலும, சமயங்களில் என்னை வந்து அணைத்துக்கொண்டு “நீ ரொம்ப நல்ல அம்மா. ஐ லவ் யூ மா” என்று சொல்லும்போது, அவளுக்கு எல்லாம் புரிகிறதோ என்று தோன்றும்.
“இப்போ லீவ் இல்லயே. எதுக்கு போகணும்? எப்போ திரும்பி வருவோம்? அப்பா தனியா இருப்பாரே?”
“திரும்பி வர மாட்டோம்டா கண்ணு. அப்பாக்கு என்னை பிடிக்கலே. நான் செத்தா நிம்மதின்னு நேத்து சொன்னார்.”
“நீ வேணும்னா போமா. நான் அப்பா கூட இருக்கேன்.”
“உன்னை யார்டா பாத்துப்பாங்க?”
“வேலைக்கு ஆள் வெப்பார் அப்பா”
“ஸாரி மது. நீயும் எங்கூடதான் வரே”.
அன்றும் வழக்கம்போல பின்னிரவில் வந்திருக்கிறான் போலும். நான் அதிகாலை எழுந்த்ததும் பின்னாலே தானும் வந்தான்.
 “இந்தக்கடிதம் பார்த்தாயா?”
மது கையெழுத்துப்போல் இருந்தது.
“அப்பா நீயும் அம்மாவும் ஏன் சண்டை போடறீங்க?
நாம ஹாப்பி ஃபேமிலியா இருக்கலாம்.
நீ அம்மாகிட்ட அன்பா பேசு’.
எனக்கு கண்ணீர் வந்த்து.
மது எழுந்து வந்து எங்கள் இருவரையும் மாற்றி-மாற்றி பார்த்தது. அவன் என் தோள்மேல் கை போட்டு “மது, இனிமே நாங்கள் சண்டையே போட மாட்டோம். பிராமிஸ்.”
அன்று முழுவதும் இருவரும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தோம். நான் டிக்கெட் கான்சல் செய்து விட்டேன். ரெண்டு நாட்களில் நிலைமை கொஞ்சம் சரியானாற்ப்போல் இருந்தது. ஆனாலும் உள்ளே ஒரு நெருடல்.
“மது, அன்னிக்கு நீ ஏன் அப்பா கூடவே இருக்கேன்னு சொன்னே? அப்பாதான் உனக்கு இன்னும் பிடிக்குமா?”

“இல்லமா. வெட்னெஸ்டே அன்னிக்கு ஸ்கூல்ல டான்ஸ் போட்டி இருக்கில்ல? சென்னை போனா அது மிஸ் ஆயிடுமே. அதான்” என்றாள்.

4 comments:

Brindha said...

Awesome Rathi 💚 Always a fan 💙💛

Rathi said...

Thanks so much Brindha :)

UplayOnline said...

Always a fan 💙💛


thai porn

GD said...

A child is a child