Written for a short story contest. Already published earlier in English as 'The Music Teacher'
வந்தவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். வியர்த்து போயிருந்தது. நெற்றியில் கும்குமம் இசையமைப்பாளர் சங்கர் கணேஷில் ஒருவரை நினைவுப்படுத்தியது. சிறிய தொப்பை, முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பு. நிச்சயமாக பாடத்தெரிந்தவர் போல் இல்லை.
"காலைல பாட்டு, கிடார் சொல்லி குடுக்க ஆள் வேணும்னு போன் செய்தது?"
"நான்தான். உள்ள வாங்க".
சோபாவில் காலை பரத்தி அமர்ந்தார்.
"யாருக்கு பாட்டு?"
"எனக்குத்தான் சார்" என்றேன்.
"கிடார்?"
"என் தம்பிக்கு"
சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தோம். தனக்கு 'கிஸோர் குமார்' பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என்னை பார்த்து திரும்பி "உங்களுக்கு யிந்தி தெரியுமா" என்றார். சிரிப்பை அடக்கிக்கொண்டு கொஞ்சம் தெரியும் என்றேன்.
"கிடார் கத்துக்கொடுக்க வேற யாராவது வருவாங்களா?"
"இல்ல மேடம் நான்தான் பாட்டு, கிடார், ட்ரம்ஸ், பியானோ எல்லாம் சொல்லி குடுப்பேன்", எனக்கு ஏனோ 'சிங்காரவேலன்' கமல் நினைப்பு வந்தது.
என் தம்பியுடன் உள்ளறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் உள்ளிருந்து 'டொய்ய் டொய்ய்' என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.
வெளியில் வந்து என்னை பார்த்து “அப்போ ஆரம்பிக்கலாமா என்றார்”
அதற்க்குள் நான் துணைக்கு அம்மாவையும் பக்கத்து வீட்டில்
வசித்த அக்காவையும் சேர்த்திருந்தேன்.
“ஸார் சுருதிப்பெட்டி?”
“அடுத்தமுறை பாத்துக்கலாம்.
ச-ப-ச பாடுங்க”
உடனே நான் பாட,
“ஆஹா சுருதி பெட்டி மாதிரியே இருக்கு” என்றார்.
என் கச்சேரி கனவுகள் கொஞ்சம் மங்கினாற்ப்போல் தோன்றியது.
வாத்தியாரோ விவேகானந்தரை கண்ட பரமஹம்சரைப்போல் பரவசத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஜண்ட வரிசை சரளி வரிசை பாடலாமா?”
என்றதும், நாங்கள் கோரசாக பாட,
அவர் உற்சாகம் தாங்காமல் வெறியோடு தொடையில் அப்பளம் தட்டி கொண்டே அமர்ந்த இடத்தில் ஆட,
ஒரே கோலாகலம்.
இன்னும் அவர் பாடி கேட்கவில்லையென்று,
நான் “சார், ஒரு
சின்ன பாட்டு சொல்லிக்குடுங்க” என்றேன்.
“எல்லாமே பெரிய பாட்டுதான் தெரியும்.
அதான் யோசிக்கறேன்.” என்றார்.
நான் விடுவதாக இல்லை.
“ஒரே ஒரு பாட்டு”.
“சரி. சிம்ப்பிளா ஒண்ணு சொல்லி தரேன்”.
அதற்க்குபின் அவர் போட்ட சத்தத்தை இசை என்று சொன்னால்,
கலைவாணி வீணையால் என் மண்டையிலே போடுவாள்,
அம்மாவுக்கு குசும்பு ஜாஸ்தி. வேண்டாம் என்று சொல்லி அனுப்புவதை விட்டு, “ஃபீஸ் எவ்ளோ?” என்றாள்.
“மாசம் மூவாயிரம்”.
“நாலு பேருக்குமா?”
அவர் அதிர்ந்துப்போய் “இல்ல மேடம்! ஒருத்தருக்கு”
“ஐயோ, ரொம்ப அதிகம் சார், எங்க பட்ஜெட்டுக்கு சரியா வராது!’
அம்மாவிடம் ஜெயிக்க முடியாது என்று அடுத்த அரைமணிநேரத்தில் அவருக்கு புரிந்துவிட்டது. அழாதகுறையாக, “சரி, எவ்வளவுனா ஒத்துப்பீங்க”.
“எல்லாருக்கும் சேத்து மூவாயிரம்னா போனா போறது. உங்களுக்கு கம்மினு தோணினா வேண்டாம் பரவால்ல” என்றாள் அம்மா.
‘நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கறது பாத்தா எனக்கு மனசு கேக்கலே, சரி நாலாயிரம் வெச்சிக்கலாம்”
“யோசிச்சு சொல்றேன் சார். நீங்க கிளம்புங்க”.
கிளம்பிப்போனதும், மடை திறந்து விட்டாற்ப்போல் எல்லோரும் பேச ஆரம்பித்தோம்.
“எனக்கென்னமோ அவ்ளோ திருப்தியா இல்ல” என்று அக்கா மெதுவாக ஆரம்பிக்க, எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தோம்.
“கிஸோர் குமாராம்.. யிந்தியாம்”
“நான் சுருதிப்பெட்டியாம்”
'டொய்ய் டொய்ய்' என்று கர்மசிரத்தையாக இன்னும் கிடாரை தடவிக்கொண்டிருந்த தம்பியை அழைத்துவந்து, நடந்த கூத்து பற்றி நான் கூற, சிரிப்பு சத்தத்தில் அழைப்புமணி அடித்தது கொஞ்சநேரம் கேட்கவில்லை.
போய் பார்த்தால் மீண்டும் வாத்தியார். “புக் மறந்துட்டேன்”.
அம்மா சொன்னாள் “யோசிச்சு பார்த்தேன். மூவாயிரம் கூட அதிகம் தான். எங்களுக்கு கிளாஸ் வேண்டாம்”.
அம்மா முகத்தில் தெரிந்த தீர்மானத்தை பார்த்து அவர், “அப்ப இன்னிக்கு கிளாசுக்கு ஆயிரம் ரூபாய் குடுங்க” என்றார்.
“என்னா சொல்லிக்குடுத்தீங்க? பசங்க அவங்களே பாடினாங்க”.
“நான் டாக்சில வந்தேன். அதுக்காவது பணம் குடுங்க”.
“நானா உங்களை டாக்சில வரச்சொன்னேன்? வேணும்னா பஸ்சார்ஜ் தரேன்”.
“ஒண்ணும் வேணாம்” என்று கோபமாக சென்று விட்டார்.
அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடித்து கிளம்பியது. எல்லோரும் ஒரு சேர பேச துவங்க, “டாக்சில வந்தேன்னு கதை விட்றார். அவர் வந்தபோது மூச்சிரைத்துக்கொண்டிருந்தார்” என்றான் தம்பி.
“இனிமே அடையாறு டைம்ஸ்ல பாத்தேன் அப்பிடினு யாரோ அசடை கூப்பிடற வேலை எல்லாம் வெச்சிக்காதே. கடா வயசு ஆறது, பாட்டு க்ளாஸெல்லாம் தூக்கி பரணைல போடு போதும்.” என்று ப்ரஹ்மாஸ்த்திரத்தை விட்டு விட்டு சென்றாள் அம்மா.
2 comments:
Hilarious, innum nyabagam irukku
Love your narrative and style. Funny one!
Post a Comment